உரப் போக்குவரத்து கட்டணம் பாரியளவு அதிகரிப்பு - விவசாயிகள் அவதி

உரப் போக்குவரத்து கட்டணம் பாரியளவு அதிகரிப்பு - விவசாயிகள் அவதி

சிறுபோகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 50 ரூபாவாக  இருந்த இந்தக் கட்டணம், 9தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு மூடை உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய சேவை மையங்களினால் தற்போது 9,550 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதுமான அளவு உரத்தை வழங்க முடியாதுள்ளதாக விவசாய பிரதிப் பணிப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு  90 கிலோ கிராம் யூரியா இடப்பட வேண்டும் என விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ள பின்னணியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எனினும், பயிர்களுக்கு இட வேண்டிய உரம் இன்னும் முறையாகக் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.