ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் கேட்கும் காணிகளை வழங்க முடியாது!
நம்பிக்கையுடன் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவையை உணர்ந்த நாங்கள் அதனை செயற்படுத்துவதற்கு முனைப்புடன் இருப்பதாக வெகுஜனஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று விஜயம் செய்த அவர் வன்னிமாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சினை பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதிக்குள் வடபகுதிக்கு வருகைதந்து இங்குள்ள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளோம். எதிர்காலத்தில் நீங்கள் நம்பிக்கையுடன் ஊடக செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஒரு தேவைப்பாடு இருப்பதை உணர்ந்த நாங்கள் அதனை செயற்படுத்துவதற்கு முனைப்புடன் இருக்கிறோம் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
கடந்த கால அனுபவங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது அனைத்து ஊடகவியலாளர்களும் சந்திக்கின்ற பிரச்சனைகள் ஒரேமாதிரியானவையாகவே இருக்கிறது. உங்களது நலன்களை முன்னிறுத்தி இந்த அமைச்சிற்கும், ராஜாங்க அமைச்சிற்கும் பிரத்தியேகமான ஏற்பாடுகளை செய்துகொண்டு அவற்றை துரிதமாக உங்கள் கரங்களில் சேர்ப்பிப்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி அமுல்படுத்தியுள்ளார்.
அத்துடன் எந்த பகுதியை சேர்ந்தாலும் ஊடகவியலாளர்கள் பொதுவானவர்களாகவே காணப்படுகின்றார்கள். அதுபோலவே அவர்களிற்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களும் பொதுவான முறையில் அனைவருக்கும் சமனாக கிடைக்கும்.
ஊடகவியலாளர்களிற்கான காணி தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நான் முன்மொழிகின்ற விடயம் என்னவெனில் எமது நாட்டில் சனத்தொகை பெருகுவதற்கேற்ப காணிகள் பெருகுவதில்லை. எனவே ஒவ்வொருவரும் கேட்கின்ற காணிகளை வழங்குவது சாத்தியமான விடயமில்லை.
விருத்தியடைந்த நாடுகளில் தொடர்மாடி வீடுகளை அமைக்கிறார்கள். எனவே அவ்வாறான ஒரு திட்டத்திற்கான முன்மொழிவை நான் சமர்பிக்க விரும்புகின்றேன். வீட்டுப்பிரச்சனை என்பது பொதுவானதாக காணப்படுகின்றது.
அந்தவகையில் இந்த சந்திப்பின் மூலம் நீங்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் தீர்துவைக்க முடியாது போனாலும் பலவிடயங்களை சிறப்பாக செய்வதற்கான ஆரம்பமாக அமையும் எனவும் தெரிவித்தார்.