கொரோனாவுடன் போராடும் உலகம்! ஐ.நாவுடன் இணைந்த 13 நாடுகள்

கொரோனாவுடன் போராடும் உலகம்! ஐ.நாவுடன் இணைந்த 13 நாடுகள்

கொரோனா வைரஸ் தொடர்பாக பரவும் பொய்யான தகவல்களை கட்டுப்படுத்த, ஐ.நா வுடன் 13 நாடுகள் கைகோர்த்துள்ளன.

இந்தியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேஷியா, லாட்வியா, சிலி, ஜார்ஜியா, லெபனான், மெக்சிகோ, மொரீஷியஸ், நார்வே, செனெகல், தென் ஆப்ரிக்கா ஆகிய, 13 நாடுகள் இதை முன்னெடுத்துள்ளன. இதற்கு, 132 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இது தொடர்பில் ஐ.நா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் நேற்று கருத்து தெரிவிக்கையில்,

“கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில், தீங்கு விளைவிக்கும் சுகாதார ஆலோசனைகள், வெறுக்கத்தக்க பேச்சு உள்ளிட்ட பல தவறான தகவல்கள், வேகமாக பரவி வருகின்றன.

கொரோனா தடுப்பு மருந்து குறித்த பொய்யான தகவல்களும் வலம் வருகின்றன. இதை தடுக்க, விஞ்ஞானிகள், மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகள், உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது அவசியம். இதற்காக, இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு, அவர் கூறினார்.