அதி வேகம், மிக தாமதம்- இரண்டுமே இனி ஆபத்து..!

அதி வேகம், மிக தாமதம்- இரண்டுமே இனி ஆபத்து..!

உரிய கால எல்லைக்கு முன்னர் அல்லது தாமதமாக பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தூர பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்துகளில் கொழும்பிலிருந்து பயணிக்கும் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அதிகமாக அல்லது குறைவாக பயணிக்கின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

உரிய கால எல்லைக்கும் குறைவான நேரத்தில் பயணிப்பதால் பேருந்துகள் அதிக வேகமாக செலுத்தப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக நேரம் பயணிப்பதால் பேருந்தில் செல்லும் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பிலும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக கொழும்பு அவசர அழைப்பு பிரிவின் ஊடாக பேருந்தின் தகவல் மற்றும் பயணிக்கும் கால எல்லையை கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரிய கால எல்லையில் பயணிக்காத பேருந்து சாரதிகள் முதற்தடவையாக எச்சரிக்கப்படுவார்கள் எனவும் அதனை மீறும் பொழுது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.