இன்று தொடக்கம் பல்வேறு தடைகளை நீக்கவுள்ள பிரான்ஸ்..!

இன்று தொடக்கம் பல்வேறு தடைகளை நீக்கவுள்ள பிரான்ஸ்..!

பிரான்சில் கொவிட்-19 தாக்கம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பல தடைகள் இன்று முதல் நீக்கப்படுகின்றன. அந்த நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். பிரான்சிலுள்ள விருந்தகங்கள் மற்றும் உணவகங்களை மீள திறப்பதற்கு இந்த மாத ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தமது நாடு முதலாவது வெற்றி அடைந்துள்ள போதிலும் மக்கள் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் பிரான்சில் தொடர்ந்தும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 காரணமாக 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அத்துடன் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இந்தநிலையில் பிரான்சில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளதோடு 29 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர்.  இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 79 லட்சத்து 82 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் உலகளவில் இந்த தொற்றால் இதுவரை மொத்தமாக 4 லட்சத்து 35 ஆயிரத்து 166 பேர் பலியாகியுள்ளனர். எவ்வாறாயினும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியிருந்த 41 லட்சத்து 3 ஆயிரத்து 984 பேர் முழுமையாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.