புனித மக்கமா நகருக்கு செல்ல உள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு புனித மக்கமா நகருக்கு செல்லும் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித இறுதி முடிவுகளையும் எடுக்கவில்லை என இலங்கை ஹஜ் குழு தலைவர் மர்ஜான் பளீல் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் சவூதி அரேபியஹஜ் அமைச்சு கூட உத்தியோகபூர்வமான எந்த அறிவிப்பையும் வழங்கவில்லையென தெரிவித்தார். மேலும் கூறியதாவது,
இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் இன்னும் சில நாடுகளும் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதில்லையென உறுதியாக அறிவித்துள்ளது.
சவூதி அரேபிய ஹஜ் அமைச்சினால் இது தொடர்பில் ஏதாவது அறிவிப்புகள் எமக்கு கிடைக்கப்பெற்றால் ஆராய்ந்து உறுதியான முடிவை எமது குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.
இதுவரை 'கொவிட் 19' நோய் தாக்கத்தின் பாதிப்பினால் சவூதி அரேபியா கூட தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சில சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற அதேவேளை ஒரு சில விமான நிலையங்கள் கூட மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில், இவ்வருட ஹஜ் கடமை தொடர்பில் ஏதாவது முடிவுகள் எடுக்கப்பட்டால் அதனை எமது குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.