பால்தேவையை பூர்த்தி செய்ய பசில் ராஜபக்ச வகுத்துள்ள பாரிய திட்டம்

பால்தேவையை பூர்த்தி செய்ய பசில் ராஜபக்ச வகுத்துள்ள பாரிய திட்டம்

உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாரிய அளவிலான பத்து பாற்பண்ணைகளை ஆரம்பிக்கப் போவதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்து ஓரிரு வருடங்களுக்குள் உள்ளூர் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளூரிலேயே பால்மாவை தயாரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமையை ஒழிக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

உள்நாட்டு பால் தேவையில் 85 சதவீதமானவை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உள்நாட்டு பாற் பண்ணைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இவ்வுற்பத்திக்கு மேலதிகமாக புதிய பால் உற்பத்தியாளர்களை உருவாக்க இவ்வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முதலீட்டு சபையின் ஊடாக நிவாரணங்களும் ஊக்குவிப்புக்களும் வழங்கப்படவுள்ளன. குளிர்ச்சியான காலநிலையை கொண்ட பகுதிகளிலும் வறட்சியான காலநிலையை கொண்ட பகுதிகளிலும் கால்நடைகளுக்கான உணவுக்குத் தேவையான சோளம் மற்றும் தானிய வகைகளை பயிரிடுவதற்காக அரச காணிகள் வழங்கப்படும். எஞ்சியுள்ள தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தேவையான சோளச் சேனையை பெரும் போகத்தில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் இப்பேச்சுவார்த்தையின் மூலம் தெரியவந்தது.

பாற்பண்ணைகளை நடத்திச் செல்வதற்கு இடவசதிகள் காணப்படுகின்ற முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், தற்போது ஒன்பது பெருந்தோட்ட கம்பனிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற காணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்காது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் தேவை காணப்படுவதாயின் ஒருங்கிணைந்த திட்டமாக அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

அரச நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படுகின்ற காணிகளுக்கு பதிலாக இதுவரை, எவ்வித பயன்பாட்டுக்கும் உட்படாத பயிரிடக்கூடிய காணிகளை மாத்திரம் கோருமாறு பசில் ராஜபக்ஷ முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

பால் உற்பத்தி துறையை முன்னேற்றுவதில் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்தும் முதலீட்டாளர்கள் கருத்துக்களை முன்வைத்ததுடன், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் என்பதால் இப்பிரச்சினையை தீர்த்து வைக்க அரச நிறுவனங்களின் பங்களிப்பு கிடைப்பதாகவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் தருவிக்கப்பட்ட பசுக்களை பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட வட்டவல பால் உற்பத்தி பண்ணையை பார்வையிட பசில் ராஜபக்ஷ விஜயம் செய்தார்.

சுமார் 1000 பசுக்கள் காணப்படுகின்ற இப்பண்ணையில் 17 ஆயிரம் லீட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.எம். சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் உள்ளிட்டோர் இதில் இணைந்திருந்தனர்.