கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் - சிக்கியது கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் - சிக்கியது கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்

மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் சுமார் ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருட்கள் நேற்றையதினம் இரவு 10 மணியளவில் வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றபோதே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் பிரிவினர் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு சென்ற வாகனத்தை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு நபர்களும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய நபர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணையின் பின் இவர்கள் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.