மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்த எச்சரிக்கை!

மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்த எச்சரிக்கை!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் தொடர்பில் மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய அறிக்கையொன்றை வெளியிட்டமை தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரில் அவரது பிரத்தியேக செயலாளரினால் கடந்த 20 ஆம் திகதி ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேராயர் முன்னதாகவே அறிந்திருந்ததாக, தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தின் மூன்று ஆயர்களினால் கடந்த 20ஆம் திகதி ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்காகவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் தொடர்பில் மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு, குறித்த தரப்பினருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஆகியோருக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.