புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது- ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது- ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது எனவும் அவர்களின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நம்புவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையானது எந்தவொரு அதிகாரத் தரப்புடனும் இணையாத அணிசாரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

75ஆவது பொதுச் சபையின் பொது விவாதத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்ட உரையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் செயன்முறைகளுக்கு உதவுவதும் ஆதரிப்பதும் ஐ.நா.வின் பொறுப்பாகும் எனவும் அது அந்தந்த நாட்டு மக்களின் தேவைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டுவருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் மக்களின் துடிப்பு மற்றும் தேவைகளை மிகச்சிறந்த முறையில் புரிந்துகொள்கின்றன என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையானது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அனுபவித்த நிலையில், அனைத்து பயங்கரவாத செயல்களையும் உள்நாடு அல்லது சர்வதேசமாக இருந்தாலும் மிகக் கடுமையான வகையில் கண்டிக்கிறது.

இலங்கை மண்ணிலிருந்து அது நீக்கப்பட்ட போதிலும், இந்தப் பயங்கரவாத அமைப்பின் சர்வதேச தொடர்பாடல் எஞ்சியிருக்கிறது. அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தி சில தலைநகரங்களை அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரசாரங்களைப் பரப்புவதற்கு செல்வாக்குச் செலுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ் தொடர்ந்து ஆதரிக்கும் மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த நாடும் பொறுத்துக்கொள்ளாது என நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதைப்பொருள் தொடர்பான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இலங்கை ஆழ்ந்த உறுதிபூண்டுள்ளது என்பதை வெளிப்படுத்திய ஜனாதிபதி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சட்டவிரோத உற்பத்தி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின் அதிகரித்துவரும் நுட்பத்தைப் பற்றியும் இலங்கை மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதனை நிவர்த்தி செய்வதற்காக போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஒரு ஜனாதிபதி பணிக்குழு நியமிக்கப்பட்டதாகவும் அந்தக் குழு பாராட்டத்தக்க முடிவுகளைத் தந்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.