உளுந்துக்கு தட்டுப்பாடு! பசில் ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கை

உளுந்துக்கு தட்டுப்பாடு! பசில் ராஜபக்ஷ எடுத்துள்ள நடவடிக்கை

உள்ளூரில் உற்பத்தியாகும் உளுந்தை பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த முடியும் என்பதுடன், அந்நிய செலாவணியை உள்நாட்டுக்குள் தக்கவைத்துக் கொள்ள முடியுமென பொருளாதார புத்துணர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலசரக்குத்தூள் மற்றும் அப்பளம் உற்பத்தியாளர்களுடன் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சந்தையில் உளுந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சிறிய மற்றும் நடுத்தர பலசரக்குத்தூள் உற்பத்தியாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அப்பளம் மற்றும் பலசரக்குத்தூள் உற்பத்தியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து மாவின் விலை சுமார் 800 ரூபாவாக உள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட உள்ளூர் உளுந்து ஒரு கிலோவின் விலை 1,300 ரூபாவாக உள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் உள்ளூர் உளுந்தை பயன்படுத்துவதைவிட இறக்குமதி செய்யப்பட்ட உளுந்தை உட்கொள்வதை நோக்கி நகர்ந்துள்ளனர்.

20,000 மெ. தொன் உளுந்து நாட்டின் மொத்த தேவையாகவுள்ள போதிலும் தற்போது 5,000 மெ.தொன் மட்டுமே இலங்கையில் பயிரிடப்படுகிறது.

விவசாயத்துறையில் தொடங்கப்பட்டுள்ள சுபீட்சமான வேலைத்திட்டங்களின் பிரகாரம் இந்த ஆண்டு முதல் உளுந்து உற்பத்திக்கான ஏக்கர்களை அதிகரிக்கவும் ஆண்டொன்றுக்கு 25,000 மெ.தொன் உளுந்தை உற்பத்தி செய்யவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.