போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்து பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம்- ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்து பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே தனது நோக்கம்- ஜனாதிபதி

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு உதவுவது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெறும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில், அரச தலைவர்களுக்கான மாநாடு இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவு ஆரம்பமானது.

அதில், நேற்றைய தினம் தொலைகாணொளி மூலம் உரையாற்றியபோது ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாம் விரும்பும் எதிர்காலம், எமக்கு தேவையான ஐக்கிய நாடுகள் சபை, பல்தரப்புக்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை மீள் உறுதி செய்வோம்” என்பது மாநாட்டின் கருப்பொருளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், பொதுச் சபைக் கூட்டத்தொடரின் தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோரின் உரைகளுடன் மாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாட்டில், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 4.45க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.

சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த குற்றவியல் குழுக்களின், அதிகரித்துவரும் நுணுக்கங்கள் குறித்து இலங்கை தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது

அந்த செயலணி நிறுவப்பட்டதிலிருந்து பாராட்டத்தக்க பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் அனுபவித்த இலங்கை, உள்நாட்டு அல்லது சர்வதேச ரீதியில் அனைத்து தீவிரவாத செயல்களையும் மிக வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கை மண்ணிலிருந்து தீவிரவாதம் நீக்கப்பட்ட போதிலும், அதன் இரக்கமற்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தியும், அதன் ஆதாரமற்ற பொய்கள் மற்றும் பிரசாரங்களை பரப்பிக்கொண்டு இந்த தீவிரவாத அமைப்பின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை சித்தாந்தத்தை வெவ்வேறு போர்வைகள் மற்றும் வெளிப்பாடுகளின் கீழ், தொடர்ந்து ஆதரிக்கின்ற மற்றும் பரப்புகின்ற இந்த சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை எந்த அரசும் சகித்துக்கொள்ளாது என்று தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் தூண்டல்களை கருத்திற்கொள்ளாது தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு உலகளாவிய சமூகம் இலங்கைக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆட்புல ஒருமைப்பாடு, அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக தனது உரையின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.