ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், றம்பதெனிய பகுதியில், பாரிய பாறை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக, குறித்த பாறை சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், வீதியில் சரிந்து வீழ்ந்துள்ள பாறையை அகற்றும் பணிகளில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மேலும் சில பாறைகள் பிரதான வீதியில் சரிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அந்த வீதியின் ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ள சாரதிகள், கினிகத்தேனை, தியகல, நோட்டன்பிரிட்ஜ், லக்ஷபான, களுகல முதலான வீதிகளை பயன்படுத்துமாறு கினிகத்தேனை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.