வெள்ளைவான் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

வெள்ளைவான் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக புதிய நீதவான் நியமிக்கப்பட்டுள்ளதால் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகளையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே, வழக்கை டிசம்பர் வரை ஒத்திவைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிலுள்ள அதிகாரிகள் என 16 சந்தேக நபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லெப்டின்ன கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிய குற்றச்சாட்டு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக இருந்த முன்னாள் கடற்படை தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது காணப்படுகிறது.

இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் நடைபெற்றது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

போலிக் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை விவகாரம் தொடர்பில் இவர்மீது விசாரணைகள் தொடர்ந்த நிலையில் அவை குறித்த விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வப் பிரிவினரால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை சார்ந்த இந்த ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை தாம் ஆராய்ந்து பார்க்க கால அவகாசம் வேண்டும் என்பதால் வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை, மத்திய வங்கி ஊழல் விசாரணையென பல முக்கியமான வழக்குகளை விசாரித்த நீதவான் ரங்க திஸாநாயக்க, வெள்ளை வான் கடத்தல் வழக்கையும் விசாரணை செய்துவந்தார்.

இந்நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவானாக இருந்த பிரியந்த லியனகே, கொழும்பு கோட்டை நீதவானாக அண்மையில் இடமாற்றம் பெற்றுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணைகளை செய்தியறிக்கையிட ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் நீதிமன்றம் வந்த போதிலும், இந்த வழக்கு விசாரணைகளை அறிக்கையிடுவதற்காக இந்த வருடத்தில் ஊடகவியலாளர்கள் வருவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.