
புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு எதிராக சஜித் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த யோசனையை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்ற பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் பிரகாரம் இந்த திருத்தச் சட்டம் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பிக்கும்படி அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த யோசனை நீதியமைச்சர் அலி சப்ரியினால் சமர்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றைய தினமே இந்த திருத்த யோசனைக்கெதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார இன்றைய தினம் உச்சநீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்த யோசனை நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்துடன் மாத்திரமன்றி, சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை கோரியே இந்த இரண்டு மனுதாரர்கள் சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 3 வாரங்களில் உச்சநீதிமன்றம் அரச தலைவருக்கும் அதேபோல சபாநாயகருக்கும் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் உச்சநீதிமன்றத்தினால் ஒரு வாரத்திற்குள் இந்த தீர்மானத்தையும் தெரியப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.