
20 ஆவது திருத்தம் தொடர்பில் எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஸ்ரீலங்காவில் கோட்டாபய – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அமெரிக்க தூதரகத்திலா தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இதுதொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
20 ஆவது அரசியலமைப்பு திட்டச் சட்டமூலத்தை யார் தயாரித்தார்கள் என்பது தொடர்பில் சமூகத்தில் பாரிய விமர்சனங்களும் எதிர்ப்புகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனை முன்மொழிந்த அரசாங்கத்திலுள்ள நபர் கூட அச்சமடைந்துள்ளார். இந்த திருத்தம் அமெரிக்க தூதரகத்தில் இருந்தா தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை முன்மொழியப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய பிரதமர் குழுவொன்றை நியமித்தார்.
அமைச்சரவை அனுமதி வழங்கி, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் ஏன் அதனை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த குழுவின் அறிக்கையும் உள்ளது. புதிய 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வரும் என அந்த குழுவின் உறுப்பினர்கள் நாட்டிற்கு கூறிய பல விடயங்கள் உள்ளன. அவை ஒன்றுமே புதிய அறிக்கையில் இல்லை. பழைய திருத்தமே மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கென உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதனை மீளாய்வு செய்வதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க உரிமையாளர் அற்ற 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
3 இல் 2 பெரும்பான்மையை வைத்துக் கொண்டு கூட அரசியலமைப்பு திருத்த விடயத்தில் இவ்வாறு கேலிக்குள்ளான நிலைமையே ஏற்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.