
பிரதமரின் வாக்குறுதியை சவாலுக்கு உட்படுத்தினாரா நீதியமைச்சர்?
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தவறை திருத்துவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கி இருந்த வாக்குறுதியை நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி சவாலுக்கு உட்படுத்தியுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது 20வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒரு தவறான ஷரத்தான அரச நிறுவனங்களை கணக்காய்வு செய்வதை தவிர்க்கும் ஏற்பாடுகளை நீக்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இவ்வாறான சூழலில், அரச வானொலியில் இன்று காலை ஒலிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நீதியமைச்சர் அலி சப்றி, 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள அந்த ஷரத்து அப்படியே இருக்க வேண்டும் எனவும் அது தவறல்ல என வாதங்களை முன்வைத்திருந்தார். அவரது இந்த வாதம் குறித்து அரசியல் அவதானிகள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் வழங்கிய வாக்குறுதி ஒன்றை மீறும் அளவுக்கு நீதியமைச்சர் அலி சப்றிக்கு கிடைத்துள்ள அரசியல் பலம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.