திருமலை பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்திய மர்மநபர் -தீவிர தேடுதலில் பொலிஸார்

திருமலை பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்திய மர்மநபர் -தீவிர தேடுதலில் பொலிஸார்

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நண்பகல் சிறுமியை இழுத்துச் சென்ற மர்மநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தனது உறவினருடன் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமி தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.

குறித்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கியபின்னர் வந்து பார்த்தபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதற்றமடைந்த சிறுமியின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்தபொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளை அடுத்து. குறித்த சிறுமியுடன் கதைத்துக்கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறுமியை இழுத்துச்செல்லும் காட்சி அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

எனவே சிறுமியை ஒருவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருக்கின்றார் எனும் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்ததோடு குறித்த நபரையும் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற சற்று மணி நேரங்களின் பின்னர் திருகோணமலை சங்கமித்தை கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிறுமி அழுது கொண்டிருப்பதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.