டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழல் : சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தாக்கல்!

டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழல் : சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தாக்கல்!

சம்மாந்துறைப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசேட டெங்கு ஒழிப்பு  வேலைத் திட்டத்தின் கீழ், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் டெங்கு ஒழிப்பு செயலணியினர் இணைந்து நேற்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, சம்மாந்துறைப் பகுதியில் தொள்ளாயிரத்து 40 வீடுகள் சோதனையிடப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி
எஸ் .ஐ. எம். கபீர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெங்கு நுளம்பு பரவக் கூடிய 71 இடங்கள் அடையாளங் காணப்பட்டு,  ஒரு வார காலத்துக்குள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டெங்குக் காய்ச்சல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 309 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்குக் காய்ச்சல் காரணமாக 27 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனனர்

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 891 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாவட்டமாக கண்டி மாவட்டம் பதிவாகியுள்ள நிலையில், கண்டி மாவட்டத்தில் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 64 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.