
உள்நாட்டு விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடாது : ஜனாதிபதி!
உள்நாட்டு விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடாது என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை நாட்டின் இறையான்மை, சமத்துவம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டு குறித்து உரிய கவனம் செலுத்துமென தாம் நம்புவதாகவும் ஜானாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கிடையில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது ஆண்டு உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்றிரவு 7.45 அளவில் காணொளி தொழில் நுட்பம் மூலம் குறித்த மாநாடு ஆரம்பமானது.
இந்த உச்சி மாநாட்டில், இலங்கை நேரப்படி இரவு 9.45 அளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.
இந்த காணொளி மூல உரையின் போதே ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சிலரின் நலனுக்காக எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக எடுத்துக்கொள்ளாததன் மூலம், உறுப்பு நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான கூட்டாண்மை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த தன்மையை அதிகரிக்க முடியுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் 180 நாடுகளின் தலைவர்கள் காணொளி மூலம் உரையாற்றியமை சுட்டிக்காட்டத்தக்கது.