மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை- நெஞ்சை நெகிழ வைக்கும் இளைஞனின் செயல்
கொழும்பு நகரங்களில் உள்ள தெருக்களில் தொடங்கி, வீடுகள் வரை அத்தனையும் சுத்தமாக இருக்க வேண்டும் சுத்தமின்மையால் நோய்க் கிருமிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இரவு பகலாகக் கைகளில் கையுறை, முகக் கவசம் கூட இல்லாமலும் கூட சுத்தம் செய்வது, கிருமி நாசினிகளத் தெளிப்பது என்று தங்கள் கடமையை துப்புரவுப் பணியாளர்கள் செய்து வருகிறார்.
இவ்வாறு நமக்காக அன்றாடம் பல இன்னல்களை, சிரமங்களை பாராமல் கடமையாற்றும் இவர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்..? உண்மையில் ஒன்றுமில்லை என்பதே நம்மில் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.
ஆனால், இதற்கு விதிவிலக்காக இவர்களை மதித்து, இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இவர்கள் மீது அன்புச் செலுத்தும் வகையில் செயற்பட்ட ஒரு இளைஞன் மீது தற்போது நாட்டு மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆம், நாளாந்தம் மழையோ வெயிலோ என்று நமக்காக உழைத்து வரும் இந்த பணியாளர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக ஒரு இளைஞன் தனது அதிசொகுசு மகிழூர்தியில் இவர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு நகரை சுற்றிக் காட்டியுள்ளார். மகிழூர்தியில் பயணிக்கும் இந்த தொழிலாளர்களின் முகத்தில் புன்னகை மலர்வதை இதன்போது நம்மால் அவதானிக்க முடிகிறது.
குறித்த இளைஞன் தொடர்பில் எமக்கு விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மனிதாபிமானம் நிறைந்த இந்த இளைஞனின் செயலுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.