
பிரதமர் மஹிந்த மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே 26ஆம் திகதி சந்திப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே எதிர்வரும் 26 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைகாணொலி ஊடாக இடம்பெறவுள்ள இந்தசந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதாக “இந்தியா டுடே” செய்தி வெளியிட்டுள்ளது.
அயல்நாட்டு தலைவர் ஒருவருடன் இரு தரப்பு உறவு குறித்து இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது சந்திப்பு இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேதினம் இந்திய பிரதமர், ஐக்கிய நாடுகளின் பொது சபையில் உரையாடவுள்ளார்.
இந்த உரையில் இந்தியாவின் அயல் நாடுகளுடனான கொள்கை குறித்து அவர் கோடிட்டு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்த நாடுகளுக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் அவர் உரையாற்றுவார் என நம்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.