கிழக்கில் பொலிஸாரின் முற்றுகை! மறைத்து வைக்கப்பட்டிருந்த புராதன சிலை

கிழக்கில் பொலிஸாரின் முற்றுகை! மறைத்து வைக்கப்பட்டிருந்த புராதன சிலை

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ற.உ.சந்தனகுமார தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட புராதன சிலை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்குடா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் எஸ்.ஜ.சம்பத் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களான வீரசிங்க,அசோக்,சேனாதீர,கோபிநாத்,பியங்கர ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் அண்மையில் ஆலயமொன்றின் சிலையொன்று இனம்தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இதன்போது இவ்வாறானதொரு அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளதாகவும் இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.