கடும் அச்சமடைந்த மைத்திரி! உடனடி உத்தரவுகளை பிறப்பித்த முன்னாள் ஜனாதிபதி

கடும் அச்சமடைந்த மைத்திரி! உடனடி உத்தரவுகளை பிறப்பித்த முன்னாள் ஜனாதிபதி

முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சம் கொண்டிருந்தார் என்றும் ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என்று உத்தரவிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது சாட்சியமளித்துள்ள அவர்,

“ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த உடனடி நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

குறிப்பாக, ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் அவ்வேளை நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய போதனைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.

மீறி அவ்வாறான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாட்டில் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என சிறிசேன கருதினார்.

இந்த நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவது குறித்து சிறிசேன அச்சம் கொண்டிருந்தார், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இஸ்லாமிய போதகர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐஎஸ் அல்ஹைதா போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை பேணுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டேன்.

அவ்வாறான அமைப்புகளிடம் ஆயுதப் பயிற்சியை பெற்ற பின்னர் நாடு திரும்பியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.

எனினும் ஜனாதிபதி அவ்வாறான நடவடிக்கைகளால் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும் என்று குறிப்பிட்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.