20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது வாசிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் செயற்குழு கூட்டத்தின் போது 20ஆவது திருத்தத்தின் அனைத்து பிரிவுகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து திருத்தங்கள் இருப்பின் அதனை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, மூன்றாவது வாசிப்பின்போது வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதுடன், அதில் நாடாளுமன்றத்தில் மூன்றின் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக சபாநாயகர் அரசியலமைப்பிற்கு கையொப்பமிட்டதை அடுத்து அது சட்டமாக மாறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.