
நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் விநியோக கட்டமைப்புகள் சேதம்!
நாட்டில் குடிநீர் விநியோகத் திட்டங்களின் ஊடாக நிர்மானிக்கப்பட்ட நீர்வழங்கல் கட்டமைப்புகள் அரைவாசிக்கும் மேற்பட்டவை சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு நடத்திய ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் 4 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடிநீர் விநியோக கட்டமைப்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் விநியோக கட்டமைப்புகள் சேதமடைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சேதமடைந்து காணப்படும் அனைத்து குடிநீர் விநியோக கட்டமைப்புகள் விரைவில் புனரமைக்கப்படுமென கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் மொத்த சனத்தொகையில் 49 சதவீதமானவர்களுக்கு இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் ஐந்து வருடங்களில் அனைவருக்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.