லெபனானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் முன்னெடுப்பு!
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் ஆத்திரமடைந்துள்ள லெபனான் மக்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஆக்ரோஷமான எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். லெபனான் முழுவதும் உள்ள நகரங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், வீதிகளில் டயர்களை எரித்தும், வீதிகளை தடுத்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
தலைநகர் பெய்ரூட் மற்றும் வடக்கு நகரமான திரிப்போலியில் எதிர்ப்பாளர்கள் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்திய பொலிஸார் மீது கற்களையும் பட்டாசுகளையும் வீசினர்.
இதில், திரிப்போலியில், எதிர்ப்பாளர்கள் பல வங்கிகள் மற்றும் கடைகளின் வெளிப்புறத்தை சேதப்படுத்தினர். நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு நடந்த போராட்டங்களின் போது இப்பகுதியும் குறிவைக்கப்பட்டது.
எதிர்ப்புக்கள் தொடங்கிய ஒக்டோபரிலிருந்து லெபனான் பவுண்ட் அதன் மதிப்பில் 70 சதவீதம் இழந்த நிலையில், சாதனை அளவிற்கு குறைந்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது நிதி நெருக்கடி மோசமடைந்துள்ளது.
பவுண்டின் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியில் மத்திய வங்கி அதிக அமெரிக்க டொலர்களை சந்தையில் செலுத்தத் தொடங்கும் என்று அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை பவுண்டின் சரிவு நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை திங்கள்கிழமை தொடங்க உள்ளது. லெபனானின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வேலையற்றவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.