சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ரணில்!

சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ரணில்!

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள பல முறைப்பாடுகளின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சாட்சியாளராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய சாட்சியத்தை ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது நாளாகவும் நேற்றும் முன்னிலையாகியிருந்தார்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ. ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

திவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்ட போது , பணியிலிருந்து விலகிய ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கல் செயற்பாடு மற்றும் இசுருமத் வீடமைப்புத் திட்டத்தில் சலுகை வழங்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை அரசியல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெற்றதாக ஆர்.ஏ.ரணவக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு கிடைத்த சாட்சியங்களுக்கு அமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.