இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

இலங்கை வாழ் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!

மலையகத்தில் பெய்துவரும் பலத்த மழையால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான்காதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

எனவே அணைக்கட்டின் தாழநில பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நுவரெலிய மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும், டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும் கட்டிடமொன்றும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

குறித்த வீடுகளில் இருந்த 8 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எரோல் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் வீடொன்று சேதமடைந்துள்ளது

அத்துடன் குறித்த பகுதியிலுள்ள சில வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளதுடன் கூரைகளும் உடைந்து சேதமாகியுள்ளன.

இதேவேளை நுவரெலியா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 5.30 வரையில் அமுலில் உள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளிலும் மழையுடனான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.