வவுனியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் சாரதிகள், நடத்துனர்களுக்கு PCR பரிசோதனை!
வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்தில் இன்று முற்பகல் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் என 60 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையூடாகவும் வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் இருந்து கொழும்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, கண்டி, ஹம்பாந்தோட்டை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.