பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் நடவடிக்கை

பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் நடவடிக்கை

மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான சட்ட வரைவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
 
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கொவிட்-19 தொற்றின் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டதை அடுத்து, பல துறைகளுக்கு நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தது.
 
இதற்கமைய, முச்சக்கர வண்டிகள், பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சிற்றூர்திகள், பொருட்களை கொண்டுசெல்லும் சிறிய ரக பாரவூர்திகள், பேருந்துகள், சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் அல்லது உரிமையாளர்களினால் பயன்படுத்தப்படும் உந்துருளிகள் அல்லது சிறிய வாகனங்களுக்கு, குத்தகையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
 
எனினும், வங்கிகள், நிதி நிறுவனங்களின் மூலம் குறித்த நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டதை அடுத்து, அது குறித்து சமூக மட்டத்தில் கருத்தாடல்கள் அதிகரித்துள்ளன.
 
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர், அந்தக் கொலையுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்பட்டதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
 
ஆறுமாத கால நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு, குறித்த நிதி நிறுவனத்திற்கு மத்திய வங்கி பரிந்துரைக்கவில்லையா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர்,
 
மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு மாத்திரமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறாயின் மத்திய வங்கியின் கீழ் பதிவுசெய்யப்படாத நிதி நிறுவனத்தினால் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியாதா? என்ற கேள்விக்கு இல்லை என மத்திய வங்கி ஆளுநர் பதிலளித்தார்.
 
அவ்வாறான பல நிறுவனங்கள் உள்ளன. கண்டியிலிருந்து கொழும்பு வரையில் ஆயிரத்திற்கும் அதிகமான அவ்வாறான நிறுவனங்களை வீதியோரங்களில் அவதானிக்க முடியும்.
 
சில நிதி நிறுவனங்கள் அதிக வட்டியை அறவிடுவதாக மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டால், அந்த நிதி நிறுவனங்களை சோதனையிடும் அதிகாரம் மத்திய வங்கிக்கு இல்லையா? என்ற கேள்விக்கு மத்திய வங்கி ஆளுநர், அவ்வாறான இயலுமையும், அதிகாரமும் இல்லை என்பதையே காணக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இதேநேரம், குறித்த கொலை இடம்பெற்ற நிதி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, தற்போதைய நிலையில் மத்திய வங்கிக்கு அதிகாரமில்லை.
 
இவ்வாறான பிரச்சினையை அறிந்து சில வருடங்களுக்கு முன்னர், மத்திய வங்கி சட்ட வரைவு ஒன்றை தயாரித்துள்ளது.
 
கட்டுப்பாடுகளுக்குள் உள்வாங்கப்படாத நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகார சபையை நிறுவுவதற்காக இந்த சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த சட்டவரைவு நிதி அமைச்சிடம் கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அது அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்டு, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
 
அவ்வாறு இடம்பெற்றால், தற்போது கட்டுப்படுத்தப்படாத நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.