
தமிழரசுக் கட்சியின் புதிய செயலர் தொடர்பில் வெளிவந்த தகவல்
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இப்பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே சாலப் பொருத்தமானதாக அமையும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த துரைராஜாசிங்கம், அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும் யாரை நியமிப்பது என கட்சியே கூடி தீர்மானிக்கும்.
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்திருந்தார்.எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
பொதுச் செயலாளர் யார் என தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் எனது நிலைப்பாடு புதிய செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே.
இதனை நான் ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறி உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.