பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர்

பௌத்த தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர்

பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை), களனி ரஜமஹா விகாரையின்  www.kelaniyatemple.lk  என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தபோதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

பௌத்த தத்துவம் தொடர்பிலும், பிக்குமார்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும்,  தீர்வு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு செயற்பாடு , களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரர் உள்ளிட்ட சபையினரால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

களனி ரஜமஹா விகாரையின் பங்களிப்பு சபையின் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘ஸ்ரீ கல்யாணி துருது தர்ம சொற்பொழிவுகள் – பாகம் 12’ பங்களிப்பு சபையின் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்கவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஒரு வரலாற்று தருணம் என்றும், உலகளாவிய ரீதியில் பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பௌத்த தத்துவம் தொடர்பில் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இப்புதிய இணைத்தளத்தின் ஊடாக பௌத்தம் குறித்த விடயங்களை அறிய முடியும் என்றும் தர்ம வித்யாலயாவின் தலைவரும் களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான தெனியாயே பஞ்சலோக தேரர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , களனி ரஜமஹா விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரக்கித தேரரின் நலன் விசாரித்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனைய தேரர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு புதிய கோரளையின் உப.தலைமை சங்கநாயக்கர் பானாகாவே ஸ்ரீ பிரேமரதன தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, பிரசன்ன ரணவீர மற்றும் களனி ரஜமஹா விகாரையின் பங்களிப்பு சபை உறுப்பினர்கள்,  ஸ்ரீகல்யாணி தர்ம கல்லூரியின் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.