
நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்
நாட்டில் இதுவரையில் 40 ஆயிரத்து 401 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 95 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், 57 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6 ஆயிரத்து 21 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 14 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,983 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் மேலும் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 173 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தநிலையில் நாடாளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.