சபாநாயகர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த எதிர்க் கட்சித் தலைவர்!
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசமைப்பை மீறியுள்ளார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ரெலோ அமைப்பின் முக்கிய தலைவர்களின் ஒருவரான குட்டிமணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவரது பெயரை, தேர்தல் ஆணைக்குழு, வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்ததோடு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், குட்டிமணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்து. அவர், தனக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைக்கு அமைய, மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு நாடாளுமன்றில் இடமளிக்க முடியாதெனக் கூறி, அப்போதிருந்த சபாநாயகர், சிறந்த முன்னுதாரணம் ஒன்றை வழங்கியிருந்தார்.
ஆனால், அந்த முன்னுதாரணத்தை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ள அனுமதியளித்திருந்தீர்கள்.
அரசமைப்பின் 89, 91ஆம் உறுப்புரிமைகளை மீறி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள நபருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்திருந்தீர்கள்.
ஏன் இப்படித் தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறீர்கள்? இதனூடாக நீங்கள் அரசமைப்பை மீறியிருக்கிறீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.