தொண்டமானின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்னின்று செயலாற்றும்-பிரதமர்

தொண்டமானின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்னின்று செயலாற்றும்-பிரதமர்

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் முன்னின்று செயலாற்ற தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாப பிரேரணை முன்வைத்து சபையில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான், தனது இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் தொடர்பான கோரிக்கைகளையே முன்வைத்தார்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் தீவிரவாதத்திற்கும் இடமளிக்காது செயற்பட்டிருந்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எதிராக ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டிருந்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கான கொடுப்பனவு, வீட்டு வசதி உள்ளிட்ட சகல பிரச்சினைகளின் போதும் அந்த மக்களுக்காக அவர் முன்னின்று சேவையாற்றினார்.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குடும்பத்தினருக்கு தமது அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்

இதேவேளை, மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், கட்சி பேதங்களை துறந்து சகல தரப்பினருடன் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் இணைந்து சேவையாற்றியதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

மக்களின் சகல பிரச்சினைகளின் போதும் முன்னின்று செயலாற்றி அவற்றுக்கான தீர்வினையும் அவர் பெற்றுக் கொடுத்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு நாட்டிற்கும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் பேரிழப்பாகும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இதனையடுத்து, சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன, மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அத்துடன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கவும் தமது அனுதாப உரையை நிகழ்த்தினார்.

ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு நுவரெலியா மாவட்ட மக்களுக்கு பேரிழப்பு என அவர் தெரிவித்தார்.