கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பான நீதிமன்றின் முக்கிய தீர்மானம்!
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள ஸ்ரீலங்காவின் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் சிசிர டி ஆப்றூ, எஸ்.துரைராஜா மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் ஏப்ரல் 11ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதற்கெதிராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹகீம், முன்னாள் அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது கட்சியின் 4 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் சார்பில் ஹில்மி அஹமட் உட்பட 12 தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிகளில் புதியவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதால், மனுக்களை திருத்தி அவர்களது பெயர்களை உள்ளீர்க்க மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 7481 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 61 எனும் புதிய பிரிவூடாக கொரோனா வைரஸ் தொற்றினால் இறக்கும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்தல் எனும் விடயம் பேசப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இறப்போரின் சடலங்களை தகனம் செய்யவும், புதைக்கவும் உலக அளவில் 182 நாடுகளில் அனுமதியுள்ளதாகவும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழி காட்டலிலும் அதற்கான பரிந்துரைகள் உள்ள போதும் ஸ்ரீலங்காவில் மட்டும் தகனம் செய்வதை ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனூடாக சுதந்திரமாக தனது மத அனுஷ்டானங்களை செய்வதற்கான உரிமை உள்ளிட்டவை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி இந்த 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.