ஹட்டனில் புதுமுக மாணவர்களை உள்வாங்கும் போது பணம் மற்றும் பொருட்களை கோரும் பாடசாலை நிர்வாகம்! மாணவர்களுக்கும் எச்சரிக்கை
ஹட்டன் பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் புதிதாக அனுமதிக்கப்படும் மாணவர்களிடம் பணம் கோரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் கலவி அமைச்சின் கிழ் இயங்கி வருகின்ற போதிலும் அந்த பாடசாலைகளுக்கான கற்றல் நடவடிக்கை முதல் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் வரை அரசாங்கம் பாரிய நிதியினை ஒதுக்கி வருகிறது.
இருப்பினும், சில பாடசாலைகளில் உள்ள அதிபர்கள் புதிதாக பாடசாலைகளுக்கு உள்வாங்கும் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இம்முறை உயர் தரத்திற்காக 120 மாணவர்களை இணைத்துக் கொண்ட பாடசாலை நிர்வாகம் குறித்த பாடசாலையின் கட்டிடம் ஒன்றுக்கு மின்சார பட்டியல் செலுத்த வேண்டும்மென கோரி ஒவ்வொரு மாணவர்களும் 1500 ரூபா பணமும் ஒரு மூடை சீமந்தும் பெற்று தருமாறு கோரியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பணத்திற்காக சில அதிபர்கள் கல்வியினை வியாபார நோக்கத்தில் பார்ப்பதாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த 120 மாணவர்களையும் பாடசாலை நிர்வாகம் அழைத்து கலந்துரையாடலை மேற்கொண்டு தாம் பணம் கோரிய விடயத்தையும் சீமந்து மூடை விடயத்தையும் வெளியில் சென்று யாரிடமும் கூறக்கூடாது என எச்சரித்துள்ளது .
ஒரு மாணவனுக்கு தலா 1500 ரூபா என்ற வீதத்தில் 120 மாணவர்களுக்கும் 180000 ரூபாவும், ஒரு மாணவனுக்கு ஒரு மூடை சிமெந்து என்ற அடிப்படையில் 120 சீமந்து மூடைகளை பெற்றுதருமாறு குறித்த மாணவர்களை கோரியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் அபிவிருத்திகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர் என்ற ரீதியில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட வேண்டும். ஒரு பாடசாலையின் மின்சார பட்டியல் தொடர்பில் அதனை வலைய கல்வி பணிமனைக்கு செலுத்த வேண்டும்.
இது போன்ற விடயங்களை உரிய அதிகாரிகளிடம் கோருவதற்கு தகுதியில்லாத அதிபர்கள் புதிதாக உள்வாங்கப்படும் மாணவர்களிடம் பணம் அறவிடுவது என்பது மாணவர்களிடம் இலஞ்சம் பெறுவதற்கு சமமானதாகும்.
எனவே இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் வலையக் கல்வி பணிமனை மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் மத்திய மாகாகண ஆளநர் மற்றும் கல்வி அமைச்சு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களும் பொற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.