சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்
வரலாற்றில் முதல் முறையாக, சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால், அதன் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்று நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களான பொடி லெஸி எனப்படும் ஜனித் மதுசங்க சில்வா மற்றும் கொஸ்கொட தாரக்க எனப்படும் கீர்த்தி தாரக்க பெரேரா ஆகியோரினால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெஸி மற்றும் கொஸ்கொட தாரக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி. வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷண கெக்குணவெல இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேநேரம், அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்து நீதிமன்றிற்கு அறிக்கையிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் முன்னதாக ஆலோசனை வழங்கியிருந்தார்.
காவல்துறை திணைக்களத்திடம் உள்ள ஆயுதங்களை விடவும், தங்களிடம் ஆயுதங்களும், ஆதரவாளர்களும் இருப்பதாக திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களான அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இரண்டு மணித்தியாலங்களுக்குள் எந்தவொரு நபரையும் கொலை செய்வதற்கும் தங்களால் இயலும் என சந்தேகநபர்கள் தெரிவித்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பொடி லெஸி மற்றும் கொஸ்கொட தாரக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி. வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷண கெக்குணவெல இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.