வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊழியர்களுக்கு அரை மாத சம்பளத்துடன் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பணியகத்தின் வருமானம் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார சிரமங்கள் காரணமாக வேலை வாய்ப்பு பணியகத்தின் சில கிளையை மூட நேரிட்டுள்ளதாக பணியகத்தின் பொது முகாமையாளர், தலைமை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் இறுதி வரை அரை மாத சம்பளத்துடன், விடுமுறை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வழங்கப்படும் சம்பள தொகைக்கு அமையவே ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு செலுத்தும் தொகையும் கணக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாடு முழுவதும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அலுவலகங்களில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு அரை மாத சம்பளத்துடன், மூன்று மாத விடுமுறையை வழங்க பணியகம் தயாராகி வருவதாக கூறி பணியகத்தின் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பையும் முன்வைத்துள்ளன.