ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த டயமன்ட் கப்பலின் நிலை- தற்போது வெளியான செய்தி

ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்த டயமன்ட் கப்பலின் நிலை- தற்போது வெளியான செய்தி

இலங்கையில் கிழக்கு கடற்பரப்பின், ஆழ்கடல் பகுதியில் தீப்பற்றிய, எம்.ரி.நியூ டயமன்ட் கப்பல், தற்போது கரையில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் உள்ள பாதுகாப்பான சமுத்திர பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சங்கமன்கண்டி பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில், ஆழ்கடல் பரப்பில் தீப்பற்றிய, எம்.ரி.நியூ டயமன்ட் கப்பலில், நேற்றிரவு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.

அந்த கப்பலில் பணிக்குழாமினர் 23 பேர் இருந்துள்ள நிலையில் அவர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பலில் இருந்து காணாமல் போயிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு கடலோடி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் தீயணைக்கும் பணிகளுக்காக, இலங்கை கடற்படையின் 3 பாரிய கப்பல்களும், இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 படகுகள் உட்பட 11 படகுகளை பயன்படுத்தி பாரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கை வான்படைக்கு சொந்தமான எம்.ஐ.17 மற்றும் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டும், தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளுக்கு ஈடுப்படுத்தப்பட்டன.

இதேநேரம், பி-200 ரக விமானமும், வை-12 ரக விமானமும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஒரு இலட்சம் லீற்றருக்கும்அதிகளவான நீர் தீயணைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறிதத கப்பல் தற்போது இலங்கை கரையில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் உள்ள பாதுகாப்பான சமுத்திர பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.ரி நியு டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்திய இலங்கை கடற்படை, வான்படை, துறைமுக அதிகார சபை, இந்திய பாதுகாப்பு படை ஆகியவற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சமுத்திரவியல் வளத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தாம் பெரிதும் மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீப்பரலின் பின்னரான நிலைமை மற்றும் சமுத்திரவியல் நிலைமை தொடர்பில் பிரதேச மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. மொஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 117 அல்லது 077 395 7883 என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எம்.ரி நியு டயமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதிலும், அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது