முதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

முதல் டி 20 போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

சவுதாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 2 ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

 

அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.

 

 

அதன்படி, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதாம்ப்டனில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

 

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஓரளவு பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டேவிட் மலன் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் இறுதி வரை போராடி 43 பந்தில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

 

இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

 

ஆஸ்திரேலியா சார்பில் அகர், ரிச்சர்ட்சன், மேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

 

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதலில் இருந்தே இருவரும் அதிரடியாக

ஆடினர். 

 

இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. வார்னர் அரை சதமடித்து அசத்தினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஆரோன் பின்ச் 46 ரன்னில் அவுட்டானார். வார்னர் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா வெற்றிக்காக போராடியது.

 

கடைசிக் கட்டத்தில் அந்த அணியின் ஸ்டோய்னிஸ் போராடினார். அவர் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

 

பரபரப்பாக நடந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.