ஸ்ரீலங்கா கடற்பரப்பில் பற்றியெரியும் கப்பலில் ஒருவர் உயிரிழப்பு!
அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீபற்றிய MT New Diamond கப்பலின் தீயை கட்டுப்படுத்த தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர், விமானப்படை, துறைமுக அதிகார சபை அதிகாரிகள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடல் எல்லை பாதுகாப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான “Mi 17” என்ற விமானம் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க பயன்படுத்தப்படுவதாகவும் “பிச் கிராப்ட்”ரக விமானம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
23 பேர் அடங்கிய கப்பல் பணியாளர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எனினும் கப்பலில் பயணித்த பிலிப்பினிய நாட்டவர் ஒருவர் உயிரழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அந்த களஞ்சிய பகுதிக்கு தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போதே கப்பலின் சமயலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து நேற்று தீபிடித்திருந்தமை குறிப்பிடதக்கது.