ஸ்ரீலங்காவின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டவர் பிரணாப் முகர்ஜி! இரங்கல் செய்தியில் ரணில் கவலை

ஸ்ரீலங்காவின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டவர் பிரணாப் முகர்ஜி! இரங்கல் செய்தியில் ரணில் கவலை

அனைத்து கால கட்டங்களிலும் ஸ்ரீலங்காவின் நலன் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்ட இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியினை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிராந்திய அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விசாலமான அனுபவத்தையும் தெளிவையும் கொண்டிருந்த சிரேஷ்ட அரச தலைவரான இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

தனது தாய்நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவைக்காக பத்ம விபூஷண் மற்றும் பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றுக்கொண்ட பிரணாப் முகர்ஜி, பாரத நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்பு அளவிடமுடியாததாகும்.

அவருடைய அரசியல் பயணத்தில் மிகவும் பொறுப்புவாய்ந்த பல்வேறு பதவிகளை வகித்தபோதும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதும் ஸ்ரீலங்காவுடன் அவரால் பேணப்பட்ட மிகவும் சுமுகமான நட்புறவுக்கொள்கை எமது மனங்களில் எப்போதும் நிலைத்திருக்கும்.

தனிப்பட்ட ரீதியில் என்னுடன் மிகவும் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த பிரணாப் முகர்ஜியின் மறைவிற்காக நானும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.