கோட்டாபயவின் எதிர்பார்ப்பு இதுவே: இராஜாங்க அமைச்சின் பகீர் தகவல்

கோட்டாபயவின் எதிர்பார்ப்பு இதுவே: இராஜாங்க அமைச்சின் பகீர் தகவல்

ஸ்ரீலங்காவின் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும் போது அதில் உள்ள இரண்டு சிறப்பான விடயங்களை 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை இன்று சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது,

தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவே 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதில் சில சிறந்த விடயங்கள் உள்ளன.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைத்தமை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய முறைகளைக் குறைத்தமை என்பன சிறந்தவை. இந்த இரண்டு விடயங்களை அப்படியே தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு இருப்பதாக நான் கருதுகிறேன்.

மேலும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் துணை பிரதமர் பதவி உருவாக்கப்படுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி தற்போது எதிர்வு கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.