இருவருக்கு கொவிட்-19 தொற்று: தென்னாபிரிக்காவின் விமானப் படை தலைமையகம் மூடல்!

இருவருக்கு கொவிட்-19 தொற்று: தென்னாபிரிக்காவின் விமானப் படை தலைமையகம் மூடல்!

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, தென்னாபிரிக்காவின் பிரிடோரியா நகரிலுள்ள விமானப் படை தலைமையகம் மூடப்பட்டுள்ளது. விமானப் படை தலைமையகத்தில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் படை செய்தித் தொடர்பாளர் ஹில்டன் ஸ்மித் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் விமானப் படை தலைமையக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருடன் தொடர்பிலிருந்த அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மேலும், நேர்மறையை பரிசோதித்த இரு உறுப்பினர்களும் ஏற்கனவே தேசிய சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என கூறினார்.

அத்துடன், சுகாதார நெறிமுறைகளின்படி தேவையான தூய்மைப்படுத்தும் செயற்முறைகள் நடைபெற்று மேலதிக அறிவிப்பு வரும் வரை விமானப்படை தலைமையகம் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேப் டவுனில் உள்ள லென்டிகூர் மனநல மருத்துவமனையில் குறைந்தது 49 ஊழியர்கள் மற்றும் நோயாளிகள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தென்னாபிரிக்காவில், சுகாதாரத் துறையில் உள்ளவர்கள் உட்பட பல அத்தியாவசிய தொழிலாளர்கள் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 55,421பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதோடு, 1,210பேர் உயிரிழந்துள்ளனர்.