மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குணரெத்தினம் சிந்துஜா வயது 26 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நுண் கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக் கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் சுமை அதிகரித்திருந்த நிலையிலேயே மனைவி வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு சிவத்தபோக்கடி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இந்த இளம் பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகளும், 15 மாதங்களேயான ஒரு கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த இளம் பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று அதனை மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதேவேளை கணவன் மது போதையுடன் தலைக்கவசமின்றியும் மோட்டார் சைக்கிளின் லைசன் இன்சூரன்ஸ் இன்றியும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ததால் போக்குவரத்துப் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு ரூபாய் 30 ஆயிரத்தைத் தண்டப்பணமாகச் செலுத்த வேண்டியதாகிவிட்டது.

இதற்கான பணத்தை இன்னொருவரிடம் வட்டிக்குப் பெற்று தண்டப் பணம் செலுத்தியுள்ளார்.

அதேவேளை வட்டிக்குப் பெற்ற பணத்தை மீளச் செலுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை விற்று அந்தப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.

அதேவேளை நகைகளும் அடைவு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குடும்ப பொருளாதார தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

இதன் காரணமாக தானும் தனது பிள்ளைகளுடன் சகோதரி பெற்றோர் ஆகியோர் வசித்த வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

கடனைத் தீர்க்க முடியாத மனச் சுமை, கணவன் பிரிந்து சென்ற மன விரக்தி ஆகியவற்றால் அவர் மனவுளைச்சலுக்குள்ளாகி எவருடனும் மனம் விட்டுப் பேசாது இருந்த நிலையில் தான் வசித்து வந்த சகோதரியின் வீட்டிலிருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ தினம் தனது கைக் குழந்தையை குளிப்பாட்டி, படுக்கையறையில் உறங்க வைத்த பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள், பொலிஸ் விசாரணையில் தெரிவித்தனர்.

பிரேதபரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.