அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்றுவோம்! திடமான நம்பிக்கையில் வியாழேந்திரன்

அனைத்து மாகாண சபைகளையும் கைப்பற்றுவோம்! திடமான நம்பிக்கையில் வியாழேந்திரன்

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் 8 மாகாணசபைகளை ஆளும் கட்சி கைப்பற்றும் எனவும் சிலவேளைகளில் ஒன்பது மாகாணசபைகளையும் அரசாங்கமே கைப்பற்றும் என தபால் சேவைகள் மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பாதுகாக்ககூடிய, சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய முன்மொழிவுகளை இந்த அரசாங்கம் முன்வைக்கும் அதற்காக இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் நன்மைக்காக உழைக்கத் தயாராகயிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமிய வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைத்த பின்னர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள அரசாங்கம் ஒரு உறுதியாக அரசாங்கம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை நெருங்கியிருக்கின்ற ஒரு பலமாக அரசாங்கம். இந்த பலம்பொருந்திய அரசாங்கத்தில் இந்த மாகாணத்தில் ஒரு அமைச்சராக நாடுமுழுதும் சேவையாற்றும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் ஒருபோதும் வீணடித்துவிடமுடியாது. இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி எமது மாவட்டத்திற்கு, மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகபட்ச நன்மைகளைப் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டும். அதுதான் மக்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இந்த மாகாணத்தில் மக்களின் இருப்பினை பாதுகாப்பதற்காக வாக்களித்த அந்த மக்களை நாங்கள் ஓருபோதும் மறந்துவிடமுடியாது. அந்த மக்களினால் இந்த மாவட்டமும் மாகாணமும் நன்மைபெறயிருக்கின்றது.

அரசாங்கம் ஓரு விடயத்தினை சொல்வதற்கு முன்பாகவே ஒரு விடயத்தினை முன்மொழிய முன்பாகவே, ஒரு விடயத்தினை செயற்படுத்துவதற்கு முன்பாகவே எதிர் கட்சியினர் பல்வேறுபட்ட கதைகளை திரிவுபடுத்தி மக்கள் மத்தியில் பிழையான கருத்துகளை கொண்டுசேர்ப்பதை பார்க்கமுடிகின்றது. எமது மக்கள் இதுகுறித்து எந்தவிதமான குழப்பமும் அடையத்தேவையில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பாதுகாக்ககூடிய,சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய முன்மொழிவுகளை இந்த அரசாங்கம் முன்வைக்கும். அதற்காக இந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் நன்மைக்காக உழைக்கத்தயாராகயிருக்கின்றோம்.

கடந்த காலத்தில் தற்போதுள்ள எதிர் கட்சியுடன் இணைந்துகொண்டு தங்களது அரசியல் நாடகத்தினை வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றிய அதே தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் கட்சிகள் இன்று அதே நாடகத்தினை கையிலெடுத்துள்ளனர். இதனை மக்கள் நன்றாக புரிவார்கள்.

உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நாங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற தேர்தல் களத்தில் நாங்கள் முன்வைத்த மக்கள் எதிர்பார்ப்பு கள அரசியல் என்ற தொனிப்பொருளுக்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். அந்த அங்கீகாரத்தினை சரியாக நாங்கள் மக்களுக்கு பயன்படுத்தி நாங்கள் சேவைசெய்யவேண்டும்.

தேர்தல் காலங்களில் நாங்கள் கூறியவை அனைத்தும் நடைபெற்றுள்ளது. இனி மாகாணசபை வரவிருக்கின்றது.இலங்கையில் ஒன்பது மாகாணசபை இருக்கின்றது.

இதில் எட்டு மாகாணசபைகளை அரசாங்கம் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. சிலவேளைகளில் ஒன்பதையும் கைப்பற்றமுடியும்.

ஓரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்று கூறிய நிலையின்று தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பினை நம்பி கடந்த காலத்தில் வாக்களித்த மக்களுக்கு உரிமையும் இல்லை, தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை.

இனிமேல் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற நினைத்தாலும் மக்கள் ஏமாறுவதற்கு தயார் இல்லை. அவர்கள் தயார் இல்லையென்பதை அண்மைய தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.