ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுமதியோம்: பொன்சேகா சீற்றம்

ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுமதியோம்: பொன்சேகா சீற்றம்

புதிய அரசியலமைப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்குமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் ஊழல் மோசடிக்காரர்களாயின் எவ்வித அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பயனற்றதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நீக்கப் போவதில்லை என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் நீக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் உள்ளிட்ட சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிப்பட்ட தேவைக்காகவே இவ்வாறான மாற்றங்களை முன்னெடுக்கின்றனர். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சில சில குறைபாடுகள் காணப்பட்டன. அவை நாட்டின் எதிர்காலத்தில் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலான குறைபாடுகள் அல்ல.

சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய சில விடயங்களில் குறைபாடுகள் காணப்பட்டன. அவற்றில் திருத்தங்களை மேற்கொள்வார்களாயின் அதற்கு நாமும் ஆதரவளிப்போம்.

ஆனால் தனியொரு பிரிவினருக்காக மாத்திரம் புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை. புதிய அரசியலமைப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுக்க முயன்றால் அதற்கு நாம் கடும் எதிர்ப்பினை வெளியிடுவோம்.

உலகில் அரசியலமைப்பு அற்ற நாடுகளும் உள்ளன. இங்கிலாந்து அரசியலமைப்பற்ற நாடாகும். அந்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் தூய்மையானவர்கள் என்பதாலும் அவர்கள் நாட்டை நேசிப்பவர்கள் என்பதாலும் அரசியலமைப்பின்றியே ஒழுக்கமான முறையில் அந்நாடுகள் முன்னோக்கிச் செல்கின்றன.

எனவே அரசியலமைப்பு இங்கு பிரச்சினையல்ல. அரசியல்வாதிகள் ஊழல் மோசடிக்காரர்களாயின் எவ்வித அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் அது பயனற்றதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.