பாரவூர்திக்குள் சிக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

பாரவூர்திக்குள் சிக்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி

அஹூங்கல்ல-வெலிகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த பாரவூர்தியை உறவினர் ஒருவர் செலுத்தி வந்துள்ள நிலையில் குறித்த பாரவூர்தியில் சிக்கி அந்த வீட்டில் இருந்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வீட்டுக்கு அருகே சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியை 15 வயது உறவினர் ஒருவர் செலுத்தியுள்ளனர். இதன்போது பாரவூர்திக்கு எதிரே மிதிவண்டியில் வந்த குறித்த சிறுவன் பாரவூர்தியில் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், பலத்த காயங்களுக்குள்ளான சிறுவனை பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்..

rn

இந்நிலையில், இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 08 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் - வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று மீள குருநாகல் நோக்கி பயணித்த மகிழூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 05 பேரும் கட்டுமான நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல்,எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 03 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தம்புத்தேகம - பாதெனிய வீதியில், தொடரூந்து கடவையில் கெப் ரக வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காயமடைந்தவர்களின் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.